நான்கு வாக்காளர் அடையாள அட்டை: பிரகாஷ்ராஜுக்குப் பிடியாணை

நான்கு வாக்காளர் அடையாள அட்டை: பிரகாஷ்ராஜுக்குப் பிடியாணை

1 mins read
fc8bde8b-4cfa-4da8-8ab0-e856134cb915
பிரகாஷ்ராஜ். - கோப்புப் படம்: டெக்கான் ஹெரால்ட்

பெங்களூரு: நான்கு மாநிலங்களில் வாக்காளராகத் தம் பெயரைப் பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நான்கு வாக்காளர் அட்டைகளை வைத்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக அவருக்குப் பெங்களூரு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி வாக்காளராக ஒருவர் தம் பெயரைப் பதிவு செய்வது குற்றமாகும்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் தம் பெயரை வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாகவும் அதன்மூலம் அம்மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

இதுகுறித்து கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கறிஞர் திலீப்குமார் என்பவர் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், நீண்ட நாள்களாகியும் தனது புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதனால் தேர்தல் ஆணையத்தை அணுகியதாகவும் அவர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் திலீப் குமார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு பிரகாஷ்ராஜுக்கு இருமுறை அழைப்பாணை அனுப்பியது. ஆனால் அவர் முன்னிலையாகவில்லை.

இதையடுத்து, பிரகாஷ்ராஜுக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்