சென்னை: தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
இதற்காக முன்பு விதிக்கப்பட்ட அபராதமானது, ரூ.500ல் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்றும் அவ்வாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாமல் இருந்தால் நடவடிக்கைகள் எடுப்பது தொழிலாளர் நலத்துறைதான்.
“அபராதத் தொகை நான்கு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் அமைச்சர் சாமிநாதன்.