சென்னை: தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமாரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கச் சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய்க்கும் மேல் கையூட்டுப் பெற்றதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் அன்பில் மகேஸ் கைதானதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் சரணடைந்த முத்துக்குமார் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், அவரைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, முத்துக்குமாரை நவம்பர் 16ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கினார். விசாரணையின்போது அவரின் வழக்கறிஞர் உடனிருக்க அனுமதி அளித்த நீதிபதி, முத்துக்குமாரை உடலளவிலோ மனத்தளவிலோ துன்புறுத்தக் கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளார். அத்துடன், அவரின் நீதிமன்றக் காவலை நவம்பர் 26ஆம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்பிணை கோரிய மனுவை வரும் 17ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு பதில் அளிக்க அவகாசம் கேட்டதால் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
