தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருக்குறள் சொன்னால் பிரியாணி இலவசம்!

1 mins read
9d385dc4-141e-4321-b653-ccbd2a5c487f
கடந்த ஆண்டு வைக்கப்பட்டிருந்த ‘திருக்குறளுக்கு இலவச பிரியாணி’ பதாகை. - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

திருவள்ளூர்: திருக்குறள் ஒப்பிப்போருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்நாட்டின் திருவள்ளூரில் செயல்படும் ஓர் உணவகம் வியப்பளித்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனிஃபா பிரியாணி உணவகம் இந்த இன்பச் சலுகையை வழங்கவிருக்கிறது.

அதன்படி, ஜனவரி 15, 16ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை திருக்குறள் சொல்வோருக்கு அந்த உணவகத்தில் இலவச பிரியாணி வழங்கப்படும்.

அவ்வகையில், பத்து வயதிற்குட்பட்ட சிறார்கள் பத்து குறள்களை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி இலவசம். பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவச பிரியாணி வேண்டுமெனில் 20 குறள்களைச் சொல்ல வேண்டும்.

இருப்பினும், இலவச பிரியாணி பெற இரண்டு முக்கிய விதிமுறைகளும் உண்டு.

ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போர் தாங்கள் சொல்லவிருக்கும் திருக்குறள்களைத் தாளில் எழுதி எடுத்துச் செல்ல வேண்டும்.

கடந்த 16 ஆண்டுகளாக அனிஃபா உணவகம் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்தி வருவதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கைப்பேசி விளையாட்டுகளில் நேரத்தைச் செலவழிக்கும் சிறார்களின் கவனத்தைத் திருப்பவே இந்த முயற்சி என்றும் இதற்கு நல்ல பயன் கிடைத்துள்ளது என்றும் கடந்த ஆண்டுப் போட்டியின்போது கடையின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்