குடும்பத் தலைவிகளுக்கு இலவச ‘ஃபிரிட்ஜ்’: அதிமுக வாக்குறுதி

குடும்பத் தலைவிகளுக்கு இலவச ‘ஃபிரிட்ஜ்’: அதிமுக வாக்குறுதி

1 mins read
968a2e94-2863-4922-a4e6-346911573b7b
அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். - படம்: தினமலர்

சென்னை: தமிழகத்தில் அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தால் வீடுதோறும் இலவசமாக ஃபிரிட்ஜ் (குளிர்பதனப் பெட்டி) வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரிசிக்கான குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இது வழங்கப்படும் என்பதை அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அவர் அறிவித்தார்.

அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதியோர் உதவித்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஏற்கெனவே மூன்று கட்டங்களாகத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. தற்போது நான்காம் கட்டமாக சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும், ஐந்து லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அதிமுக தேர்தல் அறிக்கையில் காணப்படுகின்றன.

ஆண்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம், அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடு, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை ஆகிய அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்