சென்னை: எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று திருவள்ளூர் அருகே திடீரென்று தடம் புரண்டதில் ரயில் பெட்டிகள் தீயில் கருகின.
தீயை அணைக்க பல மணி நேரம் தீயணைப்பாளர்கள் போராடினார்கள். அந்த சரக்கு ரயிலில் டீசல் இருந்ததால் தீ வேகமாகப் பரவியது.
மணலியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து அந்த சரக்கு ரயில் 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அதிகாலை புறப்பட்டுச் சென்றது.
அதிகாலை 4.45 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டது.
அதனால், ஏறத்தாழ 70,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் பெட்டிகளில் உரசல் ஏற்பட்டு ஒரு பெட்டியில் தீப்பற்றியது. அந்தத் தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.
தீ மேல்நோக்கி எரிந்ததால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்து அந்தப் பகுதி முழுவதும் சூழ்ந்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவது தீயணைப்பாளர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஏறத்தாழ ஏழு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. எரிபொருள் இருந்த பெட்டிகள் தீயில் கருகின.
ஒரு எரிபொருள் பெட்டியில் 70,000 லிட்டர் வீதம் 18 பெட்டிகளில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டு இருந்தது. அது அத்தனையும் தீயில் நாசமாகிவிட்டது. அதன் மதிப்பு ரூ. 12 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திருவள்ளூர், திரூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ அணைக்கும் பணியைத் துரிதப்படுத்தினர்.
விபத்து நடந்த பகுதி அருகே வசிக்கும் 50 இருளர், நரிக்குறவர் இன குடும்பங்களைச் சேர்ந்தோர் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்தால் ரயில் பாதையில் உள்ள சமிக்ஞை எச்சரிக்கைக் கூண்டுகளும், மின்இணைப்புகளும் சேதமடைந்தன.
அதனால், சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில்கள் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மின்சார ரயில்களும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.