திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி: தமிழக காங்கிரஸ்

3 mins read
6f62e751-2d60-473a-a744-61c26d6cd33d
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் - படம்: தினமணி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் வலுத்து வருகிறது.

காங்கிரசில் இருந்து ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது. திமுகவுடன் இணக்கமாக நடந்துவரும் காங்கிரஸ் தரப்பிலிருந்து இத்தகைய கருத்துகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளதால் கூட்டணி அரசியலில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.

ராகுல் காந்தியின் வலது கரமாகக் கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப் பிரதேசத்தைவிட தமிழகத்தின் கடன் தொகை அதிகமாகவும், கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகவும் விமர்சித்தது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு காங்கிரஸ் தரப்பிலேயே பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இருதரப்பிலும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தவெக என்ற இரண்டாவது கூட்டணி வாய்ப்பு இருப்பதால் பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையைக் காங்கிரஸ் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

காங்கிரசில் ஒரு தரப்பு, தவெகவுடன் புதிய கூட்டணிக்குச் செல்லலாம் என்றும் வலியுறுத்துகிறது. அதன் மூலம் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கட்சியின் விரிவாக்கத்துக்கு அது உதவும் என்றும் அத்தரப்பு கருதுவதாகக் கூறப்படுகிறது.

பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யைச் சந்தித்தது தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும், அது அரசியல் ரீதியாகப் பெரிய பேச்சுக்குக் காரணமாகியுள்ளது.

இதனால் திமுக தலைமையில் அதிருப்தி ஏற்பட்டதாகவும், கூட்டணி குறித்து தெளிவான நிலைப்பாட்டை விளக்க வேண்டுமென காங்கிரஸ் தேசிய தலைமைக்குத் தகவல் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் வட்டாரத்தில் சிலர், திமுக உள்ளூர் மட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும், திமுக தலைவர்கள் பலர் தங்களின் அரசியல் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

அதேவேளையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நல்ல உறவு இருக்கிறது. இதனால், காங்கிரஸ் திமுகவுடனேயே கூட்டணியைத் தொடரும் என அரசியல் கணிப்பாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், இம்முறை அதிக தொகுதிகளைக் கோரும் திட்டத்துடன் காங்கிரஸ் தேசிய தலைமை செயல்படலாம் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக காங்கிரஸின் தமிழகக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் மாற்றப்பட்டு புதிய குழுவை உருவாக்கும் முயற்சியும் பரிசீலனையில் உள்ளது.

2026 கூட்டணி தொடர்பான முடிவும் விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இருதுருவ அரசியல், 2026 தேர்தலை முன்னிட்டு இன்னும் பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது.

“பிரவீன் சக்கரவர்த்தி பேசுவது எல்லாம் காங்கிரஸின் குரல் அல்ல. இண்டியா கூட்டணி பலமாக இருக்கிறது. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற மறைமுகமாகச் சில சக்திகள் வேலை பார்க்கின்றன. திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் முடிவு எட்டப்படும்,” என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

“மாநிலங்களை அவற்றின் மொத்தக் கடனைக் கொண்டு மதிப்பிடுவது, ஒருவரின் உடல் எடையைக் கொண்டு அவரது உடல் தகுதியை மதிப்பிடுவதற்குச் சமம். அதில் உயரம் இல்லை, தசை வலிமை இல்லை, வெறும் மேலோட்டமான பார்வை மட்டுமே உள்ளது,” என காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்தில் இருந்த பகிரங்கமான மோதல்கள் மீண்டும் தலைதூக்குவது போல் தெரிகிறது,” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு திமுக மூத்த நிர்வாகிகள் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித விமர்சனமோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்