விஜயகரிசல்குளத்து அகழாய்வில் முழு சங்கு வளையல் கண்டெடுப்பு

2 mins read
a8e72719-e034-4a3e-92a5-1341154b99e5
விருதுநகர் மாவட்டத்தின் விஜயகரிசல் குளத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள மூன்றாம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையாக சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

விருதுநகர்: மூன்றாம் கட்ட அகழாய்வு விருதுநகர் மாவட்டத்தின் வெம்பக்கோட்டையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டு, அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டது.

இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட அகழாய்வில் மட்டும் 984 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மூன்றாம் கட்டமாக இப்போது நடைபெறும் ஆய்வின்போது கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடனான பெண்ணின் தலைப் பகுதி, கி.பி.16ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்புக்காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் திமிலுடன்கூடிய காலை உருவப்பொம்மை உள்ளிட்ட 1,500க்கும் அதிகமான பொருள்கள் கண்டறியப்பட்டன.

விஜயகரிசல்குளத்தில் கடந்த ஐந்தாயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில், அலங்கரிக்கப்பட்ட உடையாத சங்கு வளையல் கண்டறியப்பட்டது. இதன்மூலம், சங்கு வளையல்களை அலங்கரித்து மெருகேற்றும் கூடம் இந்தப் பகுதியில் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை இணை இயக்குநா் பொன் பாஸ்கா் தெரிவித்தாா்.

குறிப்பாக வெண்சங்கால் ஆன அணிகலன்களை அவர்கள் பயன்படுத்தியது மணிமேகலை உள்ளிட்ட பல காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேலும் ஒரு சாட்சியாக விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்