அரியலூர்: உலகப்புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்றாட அபிஷேகத்திற்குத் தண்ணீர் இல்லாதது உட்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாகக் கோயில் அர்ச்சகர் பகிரங்கப் புகார் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அக்கோயில், தமிழர்களின் கட்டடக்கலைச் சான்றாகத் திகழ்ந்து வருகிறது.
“வழக்கமாக அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் சிங்கமுகக் கிணற்றில் தற்போது நீர் ஒரு சொட்டுகூட இல்லை. இதனால் பௌர்ணமி போன்ற முக்கிய நாள்களில்கூட அபிஷேகம் செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது,” என்று கோயிலில் நிலவும் குறைபாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சகர் தெரிவித்தார்.
“தற்போதைய நிர்வாகச் சீர்கேட்டால் விளக்கேற்றுவதற்கான எண்ணெய்கூடச் சரியாக வழங்கப்படுவதில்லை. விளக்குகளின்றி, தண்ணீர் இன்றியே பூஜைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது,” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், ஆடித் திருவாதிரை அரசு விழாவிற்காகத் தாம் செலவிட்ட ரூ.50,000 பணம் இதுவரை திரும்பக் கிடைக்கவில்லை என்றும், கடந்த 3 முதல் 4 மாதங்களாகத் தமக்குரிய மாதச் சம்பளமான ரூ.6,000 வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, பக்தர்களின் வழிபாட்டிற்கும் கோயில் நடைமுறைக்கும் தேவையான குடிநீர் வசதியையும், நிலுவையில் உள்ள சம்பளத்தையும் அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோயிலில் அபிஷேகத்திற்கே தண்ணீர் இல்லை என அர்ச்சகர் எழுப்பிய புகாரைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிங்கமுகக் கிணற்றில் தண்ணீர் நிரப்பும் பணிகளை அதிகாரிகள் தற்போது முடுக்கிவிட்டுள்ளனர்.
