சென்னை: மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது. இதனால் ஈரானின் கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டு இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, பல உணவகங்கள் விறகு, கரி அடுப்புகளுக்கு மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. ஆனால், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு வழங்கப்படுகிறது.
வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு நிறுத்தப்பட்டதால், பெரும்பாலான இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
உணவகங்கள் பல விறகு மற்றும் கரி அடுப்புகளுக்கு மாறி வருகின்றன. சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டால் உணவகங்கள், தேநீர்க் கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தேநீர், சிற்றுண்டி விலைகள் அதிகரித்துள்ளன.
தேநீர்க் கடை உரிமையாளர்கள் மற்றும் உணவக சங்கங்கள் ஒருங்கிணைந்து, உணவுப் பொருட்கள் விலையை உயர்த்த எந்த கூட்டுத் தீர்மானமும் எடுக்கவில்லை. இருப்பினும், எரிவாயு விலையைத் தாக்குப்பிடிக்கும் வகையில் உணவக உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் உணவுகளின் விலையை ஏற்றியுள்ளனர். இதற்கு வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுவை கள்ளச்சந்தையில் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6,500 வரை கொடுத்து வாங்குவதே நிலையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். இது சிறிய கடைகளின் உரிமையாளர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
விறகு விலை ஏற்றம்
பல்வேறு ஹோட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகளில் எரிவாயு பயன்படுத்தி சமையல் செய்வதற்குப் பதிலாக விறகு அடுப்பில் சமையல் செய்து வருகின்றனா். இதனால் விறகு விற்பனை சூடுபிடித்து உள்ளது.
ஒரு டன் ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்ட விறகு, தற்போது ரூ.4,000க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மாதம் வரை ஒரு கிலோ விறகு ரூ.10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விறகிற்கு தேவை அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.16 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும், உணவக உரிமையாளர்கள் இதனை வாங்கியே தற்போது சமையல் செய்கின்றனர். அதேபோல், பெரும்பாலான வீடுகளிலும் பொதுமக்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர்.

