தமிழகத்தில் அரசுப் பணியில் சேர தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்: நீதிபதிகள்

2 mins read
17d0581e-18ba-4bf1-b604-ba0b6ae7cf93
உயர் நீதிமன்ற மதுரை கிளை. - படம்: ஊடகம்

மதுரை: தமிழகத்தில் இனி அரசுப் பணிகளில் சேர தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

தேனியை சேர்ந்த ஜெய்குமார் என்பவர் தேனி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தாம் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டதாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தேர்ச்சி பெறாததால் தாம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தம்மை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரி இருந்தார்.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா ஆகியோரைக் கொண்ட அமர்வு, தமிழகத்தில் அரசுப் பணியில் சேர, தமிழ்மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

மேலும், தமிழகத்தில் அரசுப் பணியாளருக்கு தமிழ் தெரியாது என்றால் என்ன செய்வது? அவரால் எப்படி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கேள்வியும் எழுப்பினர்.

“தமிழகத்தில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு அந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். மொழி தெரியாவிட்டால், குறிப்பிட்ட கால அளவுக்குள் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஒரு மாநிலத்தின் அலுவல் மொழி தெரியாமல் அரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்,” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இறுதி விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்