சென்னை: வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் அணிந்து வரும் தங்க நகைகளுக்கு சுங்க வரி விதிக்கப்படும் என சுங்கத்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
இது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்தது.
சென்னையைச் சேர்ந்த சபீனா முகமது மொய்தீன் இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா ஆகிய இருவரும் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பினர். அப்போது, சபீனா 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களையும், தனுஷிகா 88 கிராம் எடையுள்ள தாலி சங்கிலியையும் அணிந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும்போது சுங்கத்துறை விதிமுறைகளின்படி, ரூ.50,000க்கும் மேல் மதிப்புள்ள பொருள்களை கொண்டு வந்தால் வரி விதிக்கப்படும்.
ஆனால், இதை ஏற்காத சபீனாவும் தனுஷிகாவும் நீதிமன்றத்தை அணுகினர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இருவரும் தங்க நகைகளை மறைத்து எடுத்து வரவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன் உடலில் அணிந்திருக்கும் நகைகள் உடைமைகளாகக் கருதி சுங்க வரி விதிக்க இயலாது என்றும் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சுங்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையின்போது உடலில் அணிந்துள்ள நகைகளை உடைமைகளாகக் கருத முடியாது என்றால் அது நாட்டின் பொருளியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுங்கத்தரப்பில் வாதிடப்பட்டது. இதை எற்ற நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை திருப்பித்தர உத்தரவிட்டனர்.

