ஒரு லட்ச ரூபாயை நோக்கிச் சரியும் தங்க விலை

ஒரு லட்ச ரூபாயை நோக்கிச் சரியும் தங்க விலை

படம்: ராய்ட்டர்ஸ்

14 Nov 2026 - 5:12 pm

2 mins read

சென்னை: அனைத்துலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,480 குறைந்துள்ளது.

அனைத்துலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டாலருக்குக்கீழ் சரிந்ததன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாகக் குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,01,560க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.195க்கு விற்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 24 காரட் தங்கம் பத்து கிராமுக்கு ரூ.155,801 என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது ரூ.15,000க்கும் மேல் சரிந்துள்ளது.

அமெரிக்காவில் அக்டோபர் மாதப் பணவீக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் (0.3 விழுக்காடு) சற்று அதிகமாக 0.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால், அமெரிக்க மத்திய வங்கி டிசம்பர் மாதத்தில் 0.25 விழுக்காடு வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வட்டி விகிதம் உயர்ந்தால், வட்டி வருவாய் ஈட்டித் தராத தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துவருவதும் தங்கம் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியதே இந்த விலைச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகும்.

குறுகிய காலத்தில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க மத்திய வங்கியின் டிசம்பர் மாத வட்டி விகித முடிவு, டாலர் மதிப்பு ஆகியவை அடுத்தகட்ட விலையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கும்.

எனினும், உலகளாவிய பொருளியல் அல்லது புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்தால் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்