கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால், அதில் சென்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.
அன்று மாலை 6 மணியளவில், 22 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று கடலூர் நோக்கிச் சென்றது.
தியாகதுருகம் பகுதியை அடுத்த பிரதிவிமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென அதன் முன்பக்கச் சக்கரம் கழன்று, தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது.
இதனால் பதறிப்போன பயணிகள் கூக்குரல் எழுப்ப, ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்த முயன்றார்.
அப்போது பேருந்து ஒருபுறமாகச் சாய்ந்து, சாலையில் தேய்ந்து உரசியபடி சிறிது துாரம் ஓடி நின்றது.
இதற்கிடையே, கழன்று ஓடிய சக்கரம், 100 அடி தூரத்தில் சாலையோரப் பள்ளத்தில் விழுந்தது.
இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

