சென்னை: வேளச்சேரி ஏரிப் பகுதியில் விதிமுறைகளை மீறி சுமார் 1,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்ற சென்னை மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி தொடங்கியதையடுத்து, அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் மிக முக்கியமான ஏரிகளில் ஒன்றாக வேளச்சேரி ஏரி உள்ளது. இந்நிலையில் அந்த ஏரியை பலர் ஆக்கிரமித்துள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அதிகாரிகள் வேளச்சேரி ஏரியில் உள்ள மீன் பிடிப்புப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் முடிவில் ஏரிப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சுமார் 1000 வீடுகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் கணக்கெடுக்கும் நடவடிக்கையும் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.
இதனால் கடும் அதிர்ச்சிக்கு ஆளான அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்தனர். முதற்கட்டமாக அங்குள்ள 500க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தாருடன் திங்கட்கிழமையன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர்கள், கடந்த 60 ஆண்டுகளாக வேளச்சேரி பகுதியில் வசித்து வருவதாக அவரிடம் முறையிட்டனர். திடீர் என வேறு இடத்துக்குத் தங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தங்களால் ஏற்க இயலாது என்றும் திட்டவட்டமாகக் கூறினர். ஏரி உள்ள பகுதி எனில் தங்களுடைய வீடுகளுக்கு மின், தண்ணீர் இணைப்பு வழங்கியதுடன், சொத்து வரியும் வசூலித்தது எப்படி என அவர்கள் கேள்வி எழுப்பினர்.