கூவம் ஆற்றை அழகுபடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரிய அரசு

கூவம் ஆற்றை அழகுபடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரிய அரசு

படம்: இந்து தமிழ் திசை

21 Oct 2026 - 5:33 pm

1 mins read

சென்னை: கூவம் ஆற்றை அழகுபடுத்தும் வகையில் பிரம்மாண்ட திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாகக் கூவம் ஆற்றின் 3.7 கிலோ மீட்டர் தூரத்தை அழகுபடுத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக ஆக்கிரமிப்புகள், கழிவுநீர்க் கலப்பு, மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள கூவம் ஆற்றினைச் சீரமைத்து, அதன் கரைகளை அழகுபடுத்தும் மேம்பாட்டுப் பணிகள் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க சென்னை நதிகள் சீரமைப்பு நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்காகக் கூவம் ஆற்றில் நீரோட்டம், வெள்ள அபாயம், ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆற்றங்கரைப் பாதுகாப்புக் கட்டமைப்புகள், நடையர்க்கான நவீன நடைபாதைகள், சைக்கிளோட்டப் பாதைகள், சிறுவர் பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன. கழிவுநீர் கலப்பதைத் தடுத்து இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வுகளும் பரிந்துரைக்கப்படும்.

ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் வரைவு, இறுதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்