இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்களே நேரடியாகப் பத்திரப்பதிவு செய்யலாம்: அரசு

இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்களே நேரடியாகப் பத்திரப்பதிவு செய்யலாம்: அரசு

கோப்புப் படம்: மாலை மலர்

14 Nov 2026 - 9:12 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் பத்திர எழுத்தர்கள், இடைத்தரகர்களின் உதவியின்றிப் பொதுமக்களே தங்களது சொத்து ஆவணங்களை இணையவழியில் எளிதாகத் தயாரித்து நேரடியாகப் பதிவு செய்யும் புதிய நடைமுறையைத் தமிழகப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பத்திரப் பதிவுத் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள ‘ஸ்டார் 3.0’ திட்டத்தின்கீழ், பத்திரம் தயாரிக்கும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பத்திர எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இணையத்தளம் வாயிலாக சுயமாகவே ஆவணங்களைத் தயாரித்துப் பதிவுக்குச் சமர்ப்பிக்கும் வசதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள், தமிழகப் பதிவுத்துறையின் அதிகாரபூர்வ இணையத்தள (tnreginet.gov.in) பக்கத்திற்குச் சென்று தங்களது உள்நுழைவுக் கணக்கை உருவாக்க வேண்டும்.

இணையத்தளத்தில் உள்நுழைந்ததும், ‘ஆவணப்பதிவு’ என்ற பிரிவைத் தேர்வு செய்து, விற்பனை, பாகப்பிரிவினை உள்ளிட்ட தேவையான ஆவண வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதையடுத்து, விற்பவர், வாங்குபவர், சாட்சிகள், சொத்து குறித்த முழு விவரங்களைப் பதிவு செய்து சமர்ப்பித்தால், விண்ணப்பதாரருக்குத் தனி ‘டிபி எண்’ (TP Number) வழங்கப்படும்.

உள்ளீடு செய்த விவரங்களைச் சரிபார்த்து, ‘எனது ஆவணங்கள்’ பகுதியில் ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், உரிய கட்டணத்தை இணையவழியிலேயே செலுத்தி, ‘காகிதமில்லா ஆவணப்பதிவு’ முறையைத் தேர்வுசெய்ய வேண்டும்.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பத்திர எழுத்தர்கள், பத்திரம் தொடர்பான பணியில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞர்கள், பத்திர எழுத்தர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் கணினி ஆபரேட்டர்கள். பத்திர விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, ‘இணைய வழி மூலம் பத்திரப்பதிவு செய்யும்போது அதிக மோசடி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பத்திர எழுத்தர்கள் மூலம் இந்த பணிகளை செய்யும்போது மட்டுமே மோசடியை தடுக்க முடியும் என்று முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இ-ஹப் நிலையங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு பெரும் தொகை தேவைப்படும். தனியார் நிறுவனங்களால் மட்டுமே இந்த மய்யத்தை நடத்த முடியும். இதனால் பல தலைமுறைகளாக பத்திரம் எழுதும் தொழிலில் ஈடுபட்டு வரும், பத்திர எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், பத்திர விற்பனையாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

பத்திரம் தயாரிக்கும் பணியைத் தனியாரிடம் ஒப்படைத்தால் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சொத்துகளைப் பதிவு செய்ய வரும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பத்திரம் எழுத்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, தனியாரிடம் பத்திரம் தயாரிக்கும் பணியை ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பத்திரப்பதிவுத் துறையில் மாற்றங்கள் வருவது அவசியம் என்றாலும், பல தலைமுறைகளாக இந்தத் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பயன் கிடைப்பதுடன், ஏற்கனவே இந்த தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில் அரசு தீர்வுகாண வேண்டும்’ என்றும் பத்திரம் எழுதுபவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்