சென்னை: தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
போலி மருத்துவர்கள் குறித்து மின்னஞ்சல் அல்லது 104 இலவசத் தொடர்பு எண் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அந்த இயக்ககம் தெரிவித்தது.
மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககம் மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் செயல்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது இந்த இயக்ககத்தின் பணியாகும்.
மேலும், அனைத்து மருத்துவர்களையும் கட்டுப்படுத்தவும் அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் திருத்த சட்டம் - 1997ஆம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், நோயறிதல் மையங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆயுதப்படை மருத்துவமனைகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு உண்டு. எனினும், சில மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என அண்மையில் தகவல் வெளியானது.
இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


