கும்பகோணம்: உலக இதய நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) மது ஒழிப்பு மகா யாகம் நடைபெற்றது.
போதையில்லாத் தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இந்த ‘சர்வ மங்கள மகா யாகம்’ நடத்தப்பட்டது.
‘மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்’ என்பதை வலியுறுத்தி, கும்பகோணம் ரயில் நிலையம் அருகே அந்த யாகம் நடத்தப்பட்டது. தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்த அந்நிகழ்வில் பாமக நிறுவனர் ராமதாசின் மூத்த மகள் காந்தி பரசுராமன் உட்பட ஏராளமான பெண்கள் ஒரே மாதிரியான சேலை உடுத்திப் பங்கேற்றனர்.
முன்னதாக, யாகத்திற்கான புனித நீரும் யாகத்தில் சேர்க்க வேண்டிய மங்கலப் பொருள்களும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் இருந்தும், அபிமுகேஸ்வரர் திருக்கோயிலில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. பின்னர் தமிழர்களின் நாட்டுப்புற இசையும் நாதசுவர மேள தாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக, அவை யாகம் நடக்கும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன.


