சட்டமன்றத் தேர்தல் களத்தில் பிரசாரம் ஒருபக்கம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் மற்றொரு பக்கம் கூட்டணிகளில் குழப்பங்களும் குமுறல்களும் நீடிக்கின்றன.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவுவது, வெள்ளிக்கிழமை வேட்பாளர் அறிவிப்பு வெளியான பின்னர் கண்கூடாகத் தெரிந்தது.
23 நாள் இழுபறிக்குப் பின்னர் ப.சிதம்பரம் தலையீட்டிற்குப் பின்னர்தான் தொகுதிப் பங்கீட்டில்கூட சுமுகம் ஏற்பட்டது. அதற்குப் பிறகும், 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியால் எளிதில் தேர்வுசெய்ய இயலவில்லை. மற்ற கட்சிகள் எல்லாம் பிரசாரத்தில் தீவிரம் காட்டும் வேளையில், காங்கிரசில் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை இருந்தது. வேட்பாளர் யாரெனத் தெரிந்த பின்னர் முன்னணித் தலைவர்கள் குமுறத் தொடங்கிவிட்டனர். அதிலும் மேலூர் தொகுதி வேட்பாளர் இன்னும் தேர்வுசெய்யப்படவில்லை. தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக செல்வப்பெருந்தகை அறிவிக்கும் அளவுக்கு குழப்பம் உச்சமடைந்துவிட்டது.
திமுக கூட்டணியின் மற்றொரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இன்னும் திருப்தியடையாத மனநிலையிலேயே நீடிப்பதாகத் தெரிகிறது. தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்சினையால் கட்சிக்கு விசுவாசமான ஆளூர் ஷாநவாசுக்கு வாய்ப்பளிக்க இயலாத நிலை குறித்து அதன் தலைவர் திருமா விளக்கி இருக்கிறார்.
ஆனாலும், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பிரசாரக் கூட்டங்களில் விசிகவின் கொடி கம்பீரமாகப் பறப்பதைக் காணமுடிகிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு உற்றுநோக்கப்படும் கட்சியாக விசிக உள்ளது. மக்களவை உறுப்பினராக இருக்கும் திருமா, சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவதன் மர்மம் அப்போது புரியும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
‘சிரித்துக்கொண்டே அழுகிறோம்’ என்று புலம்புகிறார் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ். இடதுசாரிகளை வேண்டாவெறுப்பாகக் கூட்டணியில் வைத்திருக்கிறீர்களா எனக் கேட்கிறார் தோழர் பாலபாரதி.
திமுக கூட்டணியில் இப்படி என்றால், அதிமுக கூட்டணியில் வேறுமாதிரியான பிரச்சினை கிளம்பியுள்ளது.
2021 தேர்தலில் பாஜகவின் நாயகனாக வலம் வந்த அண்ணாமலைக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது. ஆயினும், பிரச்சினை பெரிதாக வெடிக்காதவாறு தலைமை பார்த்துக்கொண்டது. இது அந்தக் கட்சியின் விவகாரமாக இருக்கும் வேளையில், கூட்டணிக்குத் தலைமை ஏற்றிருக்கும் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரே வெளிப்படையாகக் கொதிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாத்தூர் தொகுதியில் 2019 இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ராஜவர்மன், 2021 தேர்தலிலும் போட்டியிட்டார். அமமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோற்ற அவர், இத்தேர்தலில் மீண்டும் சாத்தூரில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கக் கண்டிருந்த கனவு பலிக்கவில்லை என்கிறார். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு, தமக்கு விருப்பமில்லாத திருச்சுழி தொகுதி தரப்பட்டுள்ளதாகக் கடும் அதிருப்தியுடன் பேசி வருகிறார் ராஜவர்மன்.
தவெக என்ற ஒரு கட்சி இல்லாத, திமுக கூட்டணிக்குள் தேமுதிக நுழையாத 2021 தேர்தலில் எந்த சலசலப்பும் இல்லை. திமுக ஆட்சிக்கு வர கூட்டணிக் கட்சிகள் பாடுபட்டன. அதுபோன்ற ஓர் அமைதியான சூழல் இப்போது அதிமுக கூட்டணியில் நிலவுகிறது. திமுக கூட்டணியில் கட்சிகள் அதிகம் இருப்பதால் குழப்பங்களும் கூடுதலாக உள்ளன.
இதுவரை இல்லாத போட்டிமிகுந்த களத்தில், 2% அல்லது 3% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பறிபோகக்கூடிய சூழலில், சிறு பிரச்சினையும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதே பலரது கருத்து. - திருநா

