பொருள், சேவை வரி அதிகரிப்பு பணவீக்கம் வேகமாக உயர வழிவகுக்கவில்லை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். 2023, 2024ஆம் ஆண்டுகளில் வரி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் விலை அதிகரிப்பு மிதமாக இருந்ததை அவர் சுட்டினார்.
பொருள், சேவை வரியை அரசாங்கம் உயர்த்தியது ஏன் என்றும் அதனால் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது என்றும் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் வோங் பதிலளித்தார்.
போர், விநியோகச் சங்கிலி இடையூறுகள், உயரும் எரிசக்திச் செலவுகள் போன்ற உலகளாவிய காரணிகளே பணவீக்கம் அதிகரிக்க முக்கியக் காரணங்களாக இருந்தன. பின்னர் உலகளவிலும் சிங்கப்பூரிலும் விலைவாசி ஏற்றம் மட்டுப்பட்டது என்று பிரதமர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிங்கப்பூரின் மத்திய வங்கி பொருள், சேவை வரி அதிகரிப்பு பணவீக்கம் மீது “தற்காலிக” தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணித்தது என்றார் அவர். 7 விழுக்காடாக இருந்த வரி விகிதம் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் இரு கட்டங்களில் 9 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டில் பணவீக்கம் 6.1 விழுக்காடாக உச்சத்தை எட்டியது. இது 2023ல் 4.8 விழுக்காடாகவும் 2024ல் 2.4 விழுக்காடாகவும் குறைந்தது இதில் எங்கே வேகமாக உயர்வு இருக்கிறது என்று கேட்ட திரு வோங், “தேர்தல் நெருங்குகிறது என்று தெரியும். ஆனால் இந்த அறை தேர்தல் பிரசாரக் கூட்டம் அல்ல,” என்றார். “மிகைப்படுத்திப் பேசப்படுவதை கருத்தில்கொள்ள வேண்டாம். உண்மைகளை அடிப்படையாகக்கொண்ட விவாதத்தை நடத்துவோம்,” என்றார் அவர்.
வரவுசெலவுத் திட்டம் 2025 மீதான மூன்று நாள் விவாதத்தை முடித்துவைத்துப் பேசிய பிரதமர் வோங், பணவீக்கம் உலகளவிலும் சிங்கப்பூரிலும் குறைந்துள்ளது என்றார். இந்த விவாதத்தில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவலைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
வாழ்க்கைச் செலவின அழுத்தம் குறித்து மக்கள் இன்னும் கவலைப்படுவதையும், புதிய விலை எதார்த்தங்களுக்கு பழக காலம் தேவைப்படும் என்பதையும் நிதி அமைச்சருமான திரு வோங் ஒப்புக்கொண்டார்.
இந்தக் கவலை சிங்கப்பூருக்கு மட்டுமே ஆனதல்ல. மற்ற முன்னேறிய பொருளியல்களிலும் உணரப்படுகிறது. பொருளியல் கூறுகள் நேர்மறையாகவே உள்ளன. ஆனால் அதுகுறித்த உணர்வுகள் மோசமாக உள்ளன என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த கவலைகளை புரிந்துகொண்டுள்ளதால்தான் எஸ்ஜி60 தொகுப்பு, சிடிசி பற்றுச்சீட்டுகள் உள்ளிட்ட தற்காலிக உதவி நடவடிக்கைகளை அரசாங்கம் வழங்குகிறது.
“அரசாங்கம் இயன்றவரையில் தேவைப்படும்வரை தொடர்ந்து வாழ்க்கைச் செலவின ஆதரவை வழங்கும்,” என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.
பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த பிரதமர் வோங், வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவ அரசாங்கம் பற்றுச்சீட்டுகளை வழங்குவதில் அவர்கள் “மகிழ்ச்சியற்றவர்களாகவும், அதிருப்தியாகவும் இருப்பதாகத் தெரிகிறது” என்றார்.
“வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்க உதவுவதற்கு அரசாங்கம் பற்றுச்சீட்டுகளை மட்டுமே நம்பியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை. இவை தற்காலிக உதவி நடவடிக்கைகள். அவை நீண்ட காலத் தீர்வுகள் அல்ல.
“வாழ்க்கைச் செலவின ஆதரவுத் திட்டங்களும், எஸ்ஜி60 தொகுப்புத் திட்டமும் 2025ன் வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 5 விழுக்காட்டைத்தான் கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் செலவினங்களின் ‘மிகப் பெரும்’ பகுதி நீண்டகாலத் திட்டங்களுக்கானது. குறிப்பாக கல்வி, திறன்கள், வேலைப் பயிற்சியில் சிங்கப்பூரர்களுக்கு திறனளித்து அவர்களை வலுவுள்ளவர்களாக்குவது.
“மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பதற்கான தாக்குப்பிடிக்கக் கூடிய நீண்டகாலத்துக்கான வழி, சிங்கப்பூரர்கள் அதிக உண்மையான வருமானத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதாகும். அது வலுவான பொருளியல், உற்பத்தி ஆதாயங்களால் ஆதரிக்கப்பட வேண்டும். அதுவே அரசாங்கத்தின் அணுகுமுறையின் முக்கிய அடிப்படையாக உள்ளது,” என்று பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், சிங்கப்பூரர்களுக்கான அன்றாட வாழ்க்கை யதார்த்தங்கள் வேறுபட்டிருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
எனவேதான், ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் சிங்கப்பூரர்களுக்கு அதிக உத்தரவாதம் அளிக்கும் வகையில், முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தின் ஒரு பகுதியாக சமூக ஆதரவை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
பொருளியலைவிட சமூகவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவாவின் கோரிக்கை உட்பட, சமூகக் கொள்கைகள் சார்ந்து அரசாங்கம் துணிவான நடவடிக்கைகளை எடுக்க பலரும் விடுத்த அழைப்புகளுக்கு பிரதமர் வோங் பதிலளித்தார்.
தேவைப்படும் இடங்களில் அரசாங்கம் மேலும் செலவு செய்யத் தயாராக உள்ளது என்றார் அவர்.
“ஆனால் கொள்கைகளைச் சரியாக வகுப்பதற்கும், ஒட்டுமொத்த அமைப்பு நிதி ரீதியாக சிறப்பாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கும் சமமாக அது இருக்கும்,” என்று அவர் கூறினார்.
சமூக மேம்பாட்டுக்கான செலவு, பொருளியலுக்கும் பாதுகாப்புக்கும் செலவிடப்படும் செலவைவிட அதிகமாக ஏற்கெனவே உள்ளது என்றும் வரும் ஆண்டுகளில் அது தொடர்ந்து வளரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் சமூக அமைப்பு, சமுதாயக் கட்டிறுக்கத்தின் முக்கிய தூண்களை படிப்படியாக வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
அனைவரும் தொடக்கக்கல்வி பெறும் வாய்ப்பு, ஓய்வுக்காலத்திற்கான மத்திய சேமநிதி திட்டம், சுகாதாரப் பராமரிப்புக்கான அரசாங்க மானியங்கள், வீட்டுவசதிக்கான வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் முறை ஆகியவை இதில் அடங்கும்.
இந்தத் தூண்களை படிப்படியாக மேம்படுத்தி வந்துள்ளோம் என்றார் பிரதமர் வோங்.
“திறந்த மனதுடன், அனைத்து ஆலோசனைகளையும் இந்த அவையில் பகிரப்பட்ட யோசனைகளுக்கு அப்பாலும் கவனமாக ஆய்வு செய்கிறோம், அனைத்து சிங்கப்பூரர்களின் கருத்துகளையும் கேட்கிறோம்.
“எல்லா யோசனைகளையும் நம்மால் செயல்படுத்த முடியாமல் போகலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கும். எந்த காரணத்திற்காக அதை செயல்படுத்த முடியாது என்பதை விளக்குவோம்,” என்று திரு வோங் கூறினார்.