கோவை: பீகாரில் இருந்து சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வாங்கி, கோவையில் விற்பனை செய்தது தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகாரில் இருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதாகத் தீவிரவாத நடவடிக்கைகள் காவல்துறை தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. இதைக் கண்காணித்து வந்த காவல்துறையினர், கோவை சேரன் மாநகரைச் சேர்ந்த மணிகண்டன், 23, காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஸ்ரீ, 23, ஆகியோரை மடக்கி கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்குத் துப்பாக்கி விற்பனை செய்த பீகாரைச் சேர்ந்த குந்தன் ராய், 22, என்ற இளையரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் எதற்காகத் துப்பாக்கி வாங்கினர், கூலிப்படையாகச் செயல்படும் கும்பலா? இதற்கு முன் நடந்த குற்றச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பன குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன் வேறு யார் யாருக்குத் துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.