சென்னை: பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்து தெரிவித்தது, கனிமொழி எம்.பி.க்கு எதிராக விமர்சனம் செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும் மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்குகளில் விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை ஜி.ஜெயவேல் வெளியிட்டார். அதில், எச்.ராஜாவுக்கு எதிராகக் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாகத் தண்டனையை 30 நாள்கள் நிறுத்தி வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.