தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வியப்பையும் எதிர்பாராத வெற்றிகளையும் குவித்திருக்கிறது.
புதிதாகக் களமிறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே 1.50 கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வந்துள்ளது. இது அரை நூற்றாண்டு சாதனையாகக் கருதப்படுகிறது.
தனிப்பெரும்பான்மை பெற்றோ உதிரிக் கட்சிகளின் துணையுடனோ விஜய் முதல்வராக அமர்ந்தால் திராவிடக் கட்சிகளைச் சாராத முதல் முதலமைச்சர் என்னும் அறுபதாண்டு சாதனையை அவர் நிகழ்த்துவார்.
தமிழக வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசி இருக்கிறது. ஆயினும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு அதனைக் கணிப்பது கடினமாக இருந்தது.
எனவேதான், தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் இரு திராவிடக் கட்சிகளுக்கே வெற்றி என்று முன்னுரைத்தன.
‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ என்னும் அமைப்பின் கணிப்பே கிட்டத்தட்ட பலித்துள்ளது. மௌனமாக வீசிய விஜய் ஆதரவு அலையை அந்த அமைப்பு தெளிவாகக் கண்டதால், தவெக 98 முதல் 120 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணித்திருந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆட்சி செய்துவந்த தமிழகத்தில் 1967 தேர்தலில் அண்ணா தலைமையில் திராவிடப் புரட்சி ஏற்பட்டு அரியணையில் திமுக அமர்ந்தது. அதன்பின்னர் நீடித்த திமுக ஆட்சிக்கு 1977ஆம் ஆண்டு தேர்தல் களம் கண்ட எம்ஜிஆர் முடிவு கட்டினார்.
இருப்பினும், எம்ஜிஆர், விஜய் வெற்றிகளில் சில வேற்றுமைகளும் உண்டு. 1977ல் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கைகோத்துக் களமிறங்கிய எம்ஜிஆர், தனிப்பெரும்பான்மை பெற்று முதல்வர் ஆனார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டாலும் தனிப்பெரும்பான்மை பெறுவது விஜய்க்குக் கடினமாகிவிட்டது.
அதேநேரம், வாக்கு விகிதத்தில் எம்ஜிஆரையும் மிஞ்சிவிட்டார் விஜய். சிங்கப்பூர் நேரம் இரவு 9 மணி நிலவரப்படி தவெகவுக்கு 34.8% வாக்குகள் கிடைத்தன. 1977ல் எம்ஜிஆர் தனது முதல் தேர்தலில் பெற்ற வாக்கு விகிதம் 33.5%.
2025 ஜூலை மாதம் பேசிய தவெக தலைவர் விஜய், “தொடர்ந்து வெற்றிபெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து, 1967 மற்றும் 1977 தேர்தல்களில் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதேபோல 2026 தேர்தலும் அமையும்,” என்றார்.
அவர் சொன்னபடியே நிகழ்ந்துள்ளது. தாம் உறுதியாக முதல்வர் பதவியில் அமர்வேன் என்று ஈராண்டுகளுக்கு முன்னர் 100 விழுக்காடு உறுதியுடன் விஜய் இருந்ததாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், இப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்து வியப்படைந்திருக்கிறார்.
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான் போட்டி என்று தொடர்ந்து முழங்கி வந்தார் விஜய். அவரது ஆதரவு அலையில் சிக்கி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ளார் மு.க. ஸ்டாலின். தோல்வியைச் சந்தித்த இரண்டாவது முதல்வர் என்ற பெயர் ஜெயலலிதாவுக்குப் பிறகு மு.க. ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ளது.
தேர்தல் களம் பல வியப்புகளை அளித்ததுபோல இனி அமையப்போகும் சட்டமன்றத்திலும் அவற்றைக் காணக்கூடும். முதல்வராக விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினும் அமரக்கூடிய நிலையையே இதுவரை வெளிவந்த முடிவுகள் உணர்த்துகின்றன.

