சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அபாயகரமான காற்று மாசுபாடு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அபாயகரமான காற்று மாசுபாடு

2 mins read
3a08760f-3185-4ae2-a98f-090e27bd5e62
போதிய காற்றோட்டமின்றி காலை, மாலை நேரங்களில் இந்த மாசுபாடு உச்சத்தை எட்டுவதாக ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

சென்னை: மெட்ரோ ரயில் பயணம் மேற்கொள்ளும் லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்குத் தெரியாமலேயே கடுமையான காற்று மாசுபாட்டிற்கு ஆளாகின்றனர்.

சென்னையில் ஆயிரக்கணக்கானோர் தினமும் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, ‘ஐஐடி மெட்ராஸ்’ மேற்கொண்ட கூட்டு ஆய்வு ஒன்றில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஆலந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையேயான இரண்டாவது வழித்தடத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுரங்கப்பாதை (நிலத்தடி) ரயில் நிலையங்களில் உள்ள நுண்துகள்களின் அளவு, ரயில் பெட்டிகளுக்குள் இருப்பதை விட ஐந்து முதல் ஒன்பது மடங்கு வரை அதிகமாக உள்ளது.

அதேபோல, மேம்பால நிலையங்களில் இந்தப் பாதிப்பு இருமடங்காகப் பதிவாகியுள்ளது. ரயில்களுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த மாசுபாட்டில் 70% முதல் 90% வரை ஆபத்தான நுண்ணிய துகள்கள் என்பதும், இவை நுரையீரலின் ஆழத்திற்குச் சென்று கடுமையான சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், காற்றில் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள், கிருமிகளின் அளவு அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்பைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக ஐஐடி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வழக்கமாக சென்னை சென்ட்ரல் போன்ற நிலத்தடி நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் போதிய காற்றோட்டமின்றி காலை, மாலை நேரங்களில் இந்த மாசுபாடு உச்சத்தை எட்டுவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

குளிர்சாதன அமைப்புகளில் கிருமிநாசினி புற ஊதா (UV) விளக்குகள், சென்சார்களைப் பயன்படுத்துவதாக அது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

மேலும், பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள மதியம் 12 முதல் மாலை 4 மணி வரையிலான நேரங்களில் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதன் நிர்்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நுண்ணிய துகள்கள் மூலம் கிருமித்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதால், மெட்ரோ நிலையங்களில் அனைத்துலக விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன காற்றோட்ட, கண்காணிப்பு வசதிகளைப்போல் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்