சென்னை: பெண் பயணியிடம் இருந்து தாலிக்கொடியைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரியை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தார்
“பொதுவாக ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் 11 பவுனில் தாலிக்கொடி அணிந்திருப்பது சகஜமான நடைமுறைதான். எனவே, சோதனை செய்யும் அதிகாரிகள், சமயம் தொடர்பான நடைமுறைகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) கூறினார்.
இலங்கை குடியுரிமையுள்ள தனுஷிகா 2023 டிசம்பர் 30ஆம் தேதி, இலங்கையிலிருந்து மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரது கணவரும் பிரான்சில் இருந்து வந்திருந்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு யாத்திரை செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
சுங்கச் சோதனையைக் கடந்து செல்லும்போது, ஓர் அதிகாரி அவர்களின் உடைமைகளைச் சரிபார்த்து, தனுஷிகாவிடமிருந்த கிட்டத்தட்ட 45 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள், 88 கிராம் எடையுள்ள ‘தாலி’ குறித்து விசாரித்தார்.
தமக்கு அண்மையில்தான் திருமணம் நடந்ததாகவும், தமிழகத்தில் யாத்திரை மேற்கொண்ட பிறகு பிரான்ஸ் செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார். பிரான்ஸ் செல்வதற்கான விமானப் பயணச்சீட்டையும் அதிகாரிகளிடம் காட்டினார்.
இருந்தபோதிலும் அதிகாரிகள் தாலிக்கொடி, அவர் அணிந்திருந்த மற்ற தங்க நகைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தி கைப்பற்றினர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற அம்சங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, சுங்கச்சட்டத்தை இயற்றும்போது பயணிகள் அணிந்திருக்கும் நகைகளுக்கு நாடாளுமன்றம் விலக்கு அளித்திருப்பதைச் சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து பயணிகளையும் தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்தால், அவர்களின் கண்ணியம், உரிமைகளை அவமதிப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவது என்றால் நாடாளுமன்றம் சட்டத்தின் விதிகளில் திருத்தம் செய்யட்டும். அதுவரை, பயணிகளைத் தடுத்து வைப்பது, அவர்கள் அணிந்திருக்கும் தங்கத்தைக் கைப்பற்றுவது சட்டத்துக்குள் வராது என்று கூறியது.
“தாலியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளாமல், அதிகாரி அதைப் பறிமுதல் செய்துள்ளார். தாலி அணிவது இந்த நாட்டின் பண்பாடு. அதைக் கழற்றும்படி ஒரு பயணியிடம் கூறுவதும், வலுக்கட்டாயமாகப் பறிப்பதும் இந்திய நாட்டின் பண்பாட்டையும், இந்து மத நடைமுறைகளையும் நிர்மூலமாக்குவதாக உள்ளது. எந்த காரணத்துக்காகவும், அதை சகித்துக்கொள்ள முடியாது,” என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.
மேலும் குறிப்பிட்ட அந்த அதிகாரி, மற்ற அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் வேறு யாருக்கோ பயன் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் இப்படி நடந்திருப்பதுபோல தெரிவதாகவும், சுங்கத்துறை முதன்மை ஆணையர் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

