சென்னை: தவெக தலைவர் விஜய் முதன்முறையாக சென்னையில் வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதனால் தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இதனிடையே, சென்னை பெரம்பூர் தொகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) மேற்கொள்ளவிருந்த பிரசாரத்தை விஜய் திடீரென ரத்து செய்தது தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
வெள்ளிக்கிழமை எந்தவித முன்னறிப்பும் இன்றி, திடீரென பெரம்பூர் தொகுதிக்குச் சென்ற விஜய், அங்கு தவெக நிர்வாகிகளுடன் பிரசாரப் பணிகள், தேர்தல் உத்திகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் தவெக தேர்தல் வாக்குச்சாவடி முகவர் அலுவலகத்தின் முன்புறம், அக்கட்சியின் விசில் சின்னத்தைக் கோலமிட்டு அங்கிருந்த தொண்டர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.
விஜய்யின் வருகையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அவரைக் காண குவிந்தனர். அதற்குள் தொகுதியில் உள்ள சில வீடுகளுக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்தார் விஜய்.
புதுக் கட்சி தொடங்கிய பிறகு, இத்தகைய பிரசார நடவடிக்கையில் விஜய் ஈடுபட்டது இதுவே முதல் முறை.
இந்நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதியும் விஜய் பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் பிரசாரம் மேற்கொள்ள இயலாது என கடைசி நேரத்தில் தவெக தலைமை அலுவலகம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையமும் காவல்துறையும் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளித்திருந்த நிலையில், அவர் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, விஜய் பிரசாரம் மேற்கொள்ள ஆளும் திமுக அரசு காவல்துறையிடம் மறைமுக தடை விதித்ததாக தவெக குற்றஞ்சாட்டி இருந்தது.
தேர்தல் ஆணையம் உரிய அனுமதி அளித்தும், அதிகமான தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்த தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார் விஜய்.

