தமிழகத்தில் வெயில் குறைந்துஜூனில் தாக்கம் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் வெயில் குறைந்துஜூனில் தாக்கம் அதிகமாக இருக்கும்

2 mins read
b2e14308-97f0-40b4-b3af-59b09bead215
தமிழ்நாட்டில் அடுத்த மாதமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது. - கோப்புப் படம்: தினமணி

சென்னை: அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹைட்டைத் தாண்டிப் பதிவானது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதமும் வெயிலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைத்தது. கோடைக் காலம் தொடங்கும் முன்பே மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை முடிவடைந்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயில் அதிகமாகக் கொளுத்தியது. மேலும் வெப்ப அலையும் வீசியது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இரவில் புழுக்கத்தால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் கடந்த 25 நாட்களாகவே கத்திரி வெயில் வாட்டி எடுத்தது. அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டிப் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழகத்தில் இரண்டு நாள்கள் (வெள்ளி, சனி) வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹைட் வரை பதிவாகும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம். சென்னையிலும் வெயிலின் தாக்கம் 2 நாட்களுக்கு அதிகமாக இருக்கும். அதன்பிறகு வெயில் படிப்படியாக குறையும். ஜூன் மாதமும் வெயில் இருக்கும். ஆனால் தென்மேற்குப் பருவ மழையும், வெயிலும் மாறி மாறிக் காணப்படும்.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை குறைவாகப் பெய்யும். தமிழகத்தில் சுமார் 6 விழுக்காடு வரை பருவமழை குறைவாகப் பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்புச் சொற்கள்