கனமழை: ஆட்சியரிடம் விடுமுறை கேட்டு கைப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்பிய பள்ளி மாணவர்கள்

கனமழை: ஆட்சியரிடம் விடுமுறை கேட்டு கைப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்பிய பள்ளி மாணவர்கள்

படம்: மாலை மலர்

27 Oct 2026 - 5:46 pm

1 mins read

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழைக்கான ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’ விடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனின் வாட்ஸ்அப் எண்ணுக்குப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பினர்.

அம்மாவட்டத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை முதலே விடுமுறை அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாததால், பொறுமையிழந்த சில மாணவர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணிற்கே குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கினர்.

அதில் ஒரு மாணவர், “விடுமுறை விடாவிட்டால் எங்கள்மீது உங்களுக்கு அக்கறையே இல்லை என்று அர்த்தம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு மாணவரோ ஒருபடி மேலே சென்று, “நீங்கள் ஒரு மனிதனாகவும் ஐஏஎஸ் அதிகாரியாகவும் மாவட்ட ஆட்சியராகவும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டீர்கள்,” என்று தெரிவித்திருந்தார்.

மாணவர்களின் குறுந்தகவல்களால் கோபமடையாத ஆட்சியர் ஆனந்த் மோகன், அந்தச் சுவாரசியமான தகவல்களை கைப்பேசியில் படம்பிடித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘மழைக்கால பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

மேலும், மாணவர்களின் சில கேள்விகளுக்கு நகைச்சுவையாகப் பதிலும் அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு சுவாரசியமான பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்