தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

630,621 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

2 mins read
fecfc41a-e44d-4659-a433-c9c263d10dab
தமிழகத்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் நீடித்து வரும் பெருமழை காரணமாக, மாநிலம் முழுவதும் 630,621 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகத்தைப் புரட்டிப்போட்ட ‘ஃபெங்கல்’ புயல், வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் திங்கட்கிழமை (டிசம்பர் 16) ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழகத்தில் ‘ஃபெங்கல்’ புயல் காரணமாக 286,069 ஹெக்டர் பரப்பிலான வேளாண் பயிர்களும் 73,000 ஹெக்டர் பரப்பிலான தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

புயலை அடுத்து நீடித்த வடகிழக்குப் பருவமழையால் 225,665 ஹெக்டர் வேளாண் பயிர்கள், 45,634 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ஆகமொத்தம், இதுநாள் வரை 630,621 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டும் விதமாக பயிர் காப்பீட்டின்கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை, பயிர் காப்பீட்டு நிறுவனங்களுடன் அடுத்தகட்ட ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை முதல் 19ஆம் தேதி வியைழக்கிழமை வரை மூன்று நாள்களுக்குப் பெய்யும் மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருபக்கம் கடும் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழக குடிநீர் வாரியம் சார்பாக காவிரி, கொள்ளிடம், பாலாறு, குசஸ்தலையாறு, பென்னையாறு, தாமிரபரணி ஆறுகள் வாயிலாக 600க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுள் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கிடைக்கும் நீரைக் கொண்டு 248 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

எனினும், இத்திட்டங்களுக்காகத் தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருவதால் சம்பந்தப்பட்ட இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உரிய நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள 42 ஊராட்சிகளில், 12 ஊராட்சிகளுக்கு மட்டும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் மழை நிவாரணம் கேட்டு டிசம்பர் 16ஆம் தேதியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

திடீரென ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாலூர் பகுதியில் திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 55 பெண்கள் உள்ளிட்ட 70 பேர் கைதாகினர்.

குறிப்புச் சொற்கள்