சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 13ஆம் தேதி முதல் பரவலாக கனமழையும் அதிகனமழையும் பெய்தன.
இதனால் பல இடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதையடுத்து, சென்னையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அம்மா உணவங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்பேரில் ஆயிரக்கணக்கானோர் அரசு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உட்பட அனைத்து வசதிகளையும் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
இதற்கிடையே, கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்துவரும் நிவாரணப் பணிகளை மூன்றாவது நாளாக அக்டோபர் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் செய்தார்.
அப்போது, ஜம்புலிங்கம் முக்கிய சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில் மழையின்போது ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட 600 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, புடவை, போர்வை, துவரம் பருப்பு, மிளகாய்த்தூள் உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருள்களை முதல்வர் வழங்கினார்.
அவர்களுக்குப் பிரியாணியுடன் கூடிய மதிய உணவினைப் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அவர்களுடன் புகைப்படமும் அவர் எடுத்துக்கொண்டார்.
வீனஸ்நகர் பம்பிங் ஸ்டேஷன், ரெட்டேரி தெற்கு உபரி நீர் வெளியேற்றம், பாலாஜி நகரில் நடைபெற்ற மருத்துவ முகாம், தணிகாசலம் கால்வாய், திருவள்ளுவர் திருமண மண்டபம் போன்ற பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மழைக்கால மருத்துவ முகாம்களையும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மிகவும் சிறப்பாக, பெருமைப்படும் அளவுக்கு மக்கள் பாராட்டும் அளவுக்கு மாநகராட்சியின் பணி இருந்துள்ளது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பிற துறை அதிகாரிகளுக்கு நன்றி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளேன்,” என மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் தெரிவித்தார்.
“எங்கள் பணி மக்கள் பணி, நாங்கள் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.