குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழையை அடுத்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும்கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது.
செப்டம்பர் 29ஆம் தேதி இரவு தொடங்கிய மழை விடியும்வரை கொட்டித் தீர்த்தது.
அவ்வேளையில், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி தனது கணவர், குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தார். கதவு இடுக்கின் வழியாக வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததை அடுத்து எழுந்த அவர் தண்ணீரை வெளியேற்றுவதற்காகக் கதவைத் திறந்தார்.
அப்போது கனமழையால் அவரது வீட்டின் முன்பு இருந்த மண் திட்டு எதிர்பாராத விதமாகச் சரிந்து வீட்டின் மீது விழுந்தது. மண்சரிவில் சிக்கிய ஜெயலட்சுமியை மண் முழுவதுமாக மூடியது.
சத்தம் கேட்டு எழுந்த அவரது கணவர் மனைவியின் நிலையை அறிந்து அதிர்ச்சியுற்றுக் கத்திய குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஜெயலட்சுமியை மீட்க முயற்சி செய்தனர்.
தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஆசிரியை ஜெயலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது கணவரும் இரண்டு மகள்களும் காயமின்றித் தப்பினர்.
குன்னூரில் பெய்த மழையால் காட்டேரி, டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்தன. மின்தடையும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

