குன்னூரில் கடும் நீர்ப்பனிப்பொழிவு: குளிரால் மக்கள் அவதி

1 mins read
2bf2332a-c5e2-4cf3-8394-c9ef48558505
மழை பெய்யாத நாள்களில் நீர்ப்பனிப்பொழிவு காணப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

அருவங்காடு: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனி விழத் தொடங்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதேசமயம் மழை பெய்யாத நாள்களில் நீர்ப்பனி காணப்பட்டது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகமாகக் காணப்பட்டது.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப்பனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகளைப் பரவசப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

அதிகாலை நேரத்தில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டம் மற்றும் மலர்ச் செடிகளில் நீர்ப்பனி கண்ணாடி இழைகள் போல், முத்துகள் கொட்டியது போல் காட்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக குன்னூர், ஜிம்கானா, கரும்பாலம், காட்டேரி, குன்னகம்பை, கொலகம்பை, கொல்லிமலை, கேத்திபாலடா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப்பனிப்பொழிவு காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்காலம் தொடங்கும் முன்பு வழக்கமாக நீர்ப்பனிப்பொழிவு காணப்படும். அந்த வகையில் தற்போது நீர்ப்பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால் இன்னும் ஒரு சில வாரங்களில் உறைபனிப்பொழிவு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்