சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஏப்ரல் 16) காலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது.
கடந்த சில நாள்களாகக் கோடை வெப்பத்தில் வாடிய சென்னைவாசிகள் மழையால் சற்று ஆறுதல் அடைந்தனர்.
சென்னையில் பிற்பகல் ஒரு மணிவரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. ஆங்காங்கே கனமழை பெய்தது.
குளிர்ச்சியான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
ஆவடியில் பலத்த காற்று வீசியதால் விளம்பரப் பதாகை கிழிந்து மின் கம்பிகள்மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

