நீலகிரி: உதகமண்டலத்தை அடுத்த சோலூர் ஜங்ஷன் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் செந்நாய்கள் கூட்டம் கூட்டமாய் உலவுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
அண்மையில் அப்பகுதியில், ஒரு எருமைக் கன்றுக்குட்டியை செந்நாய்கள் வேட்டையாடி உண்ணும் காணொளிக் காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உணவு, தண்ணீா் தேடி காடுகளை விட்டு சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து உலவும் போக்கு அதிகரித்து வருகிறது.
எனவே, அப்பகுதிகளில் ஆபத்தான காட்டு விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


