திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
f319cab6-919c-4bc9-970d-a7bc076e40be
தனி நீதிபதி உத்தரவுப்படி, தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். - படம்: குமுதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தீபம் ஏற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளையில், பொது இடத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, அண்மையில் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து, தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை தனி நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, தர்கா நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தனி நீதிபதி உத்தரவுப்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீபத் தூணில் தனிநபர்கள் தீபமேற்ற அனுமதிக்க முடியாது என்றும் தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், தனி நபர்கள், அரசியல் கட்சியினர், அரசியல் இயக்கத்தினர் யாரும் அங்கு தீபம் ஏற்றச் செல்லக்கூடாது என்றும் தேவஸ்தானம் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டனர்.

ஒவ்வொரு கார்த்திகையிலும் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகுமா என்பது விரைவில் தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்