சென்னை: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, அவர் 2015-16 நிதியாண்டுக்காக தாக்கல் செய்த வருமான அறிக்கையுடன் இந்த ஆவணங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. இதில் ‘புலி’ என்ற திரைப்படத்துக்காக அவர் பெற்ற ரூ.5 கோடியை கணக்கில் காட்டவில்லை என்பது தெரிய வந்தது.
இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக, விஜய்க்கு கடந்த 2022ஆம் ஆண்டு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் விஜய். நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) தீர்ப்பு வழங்கினார்.
விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
விருப்ப மனுக்கள் பெறும் தவெக தலைமை
இதனிடையே தவெக சார்பாக, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, அக்கட்சித் தலைவவர் ஜோசப் விஜய் பெயரில் முதல் விருப்ப மனுவை நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

