ஐஏஎஸ் அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
5663f998-e68b-4101-bcc4-d58e3d236d59
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டதை தானும் கவனித்திருப்பதாகக் குறிப்பிட்டார். - படம்: ஊடகம்

மதுரை: ஊழல் குற்றச்சாட்டிற்கான முகாந்திரத்திற்கு ஆதாரங்கள் இருப்பதால் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், பால்வளத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் என்பவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

மொத்தம் ரூ.1.75 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அப்போதைய பால்வளத்துறை இயக்குநர் காமராஜ், அப்போதைய ஆணையர் வள்ளலார், கிறிஸ்துதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார் கிறிஸ்துதாஸ். அவர் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட காமராஜ், வள்ளலார் மீதான நடவடிக்கையை மட்டும் தமிழக அரசு 2023ஆம் ஆண்டு கைவிட்டதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டதை தானும் கவனித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“துறைத் தலைவரின் துணையின்றி எந்த முறைகேடும் நடக்க முடியாது. நிறுவனத் தலைமை பொறுப்பில் சரியான நபர் இருந்தால், அவர்களின் துறைகளில் எந்த ஊழலும் இருக்காது.

“தவறு செய்த ஒரு ஐஏஎஸ் அதிகாரிகூட தண்டிக்கப்படவில்லை. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு எதிராக ஏற்கெனவே துவங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்.

“காமராஜ், வள்ளலார், மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கையை, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மேற்கொள்ள வேண்டும்,” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்