ஆயிரம் கோடி ஊழல் புகார்: அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆயிரம் கோடி ஊழல் புகார்: அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

படம்: இந்து தமிழ் திசை

20 Feb 2026 - 8:33 pm

2 mins read

சென்னை: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் தொடர்ந்த நிலையில், அத்துறையின் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, மத்திய அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு புகார்கள் எழுந்தன. மேலும், அத்துறை சார்பாக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.

அதுகுறித்து தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அக்கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதிமுக எம்பி இன்பதுரையும் ஆதிநாராயணனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை கடிதத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில், விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

எனினும், போதிய ஆதாரங்களை அளித்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்குச் செவிமடுத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை கடிதங்களில் போதுமான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவும் அமலாக்கத்துறை அவர் மீதான வழக்கில் காட்டும் தீவிரமும் திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனிடையே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, அமைச்சர் கே.என். நேருவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

ஏற்கெனவே டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிலான ஊழல், இப்போது நகராட்சித்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் என்று திமுக அரசின் ஊழல்கள் அனைத்துமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திமுகஅமைச்சர்ஊழல்விஜய்பதவி விலகல்