தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த ரூ.1.40 கோடி மதிப்பு உயர் ரக கஞ்சா பறிமுதல்

1 mins read
37c622c0-c1a7-4f73-89ea-69aa74b91ec9
உறைகளைப் பிரித்துப் பார்த்தபோது அவற்றில் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. - படம்: ஊடகம்

சென்னை: விமானம் மூலம் தமிழகத்துக்கு போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானப் பயணியிடம் இருந்து ரூ.1.40 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் கடத்தி வரப்படுவது குறித்து கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து வந்த தனியார் விமானத்தில், வடமாநில இளையர் ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து சென்று நாடு திரும்பி இருந்தார்.

அவரிடம் வட இந்தியாவைச் சேர்ந்தவர் ஏன் சென்னைக்கு வர வேண்டும் என அதிகாரிகள் சந்தேகத்துடன் விசாரித்தனர்.

அவர் சற்று பதற்றம் அடையவே, அவரது உடைமைகள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டன. அப்போது ஒரு பெட்டிக்குள் உணவுப் பொருள்கள் அடங்கிய பல உறைகள் இருப்பது அதிகாரிகளின் சந்தேகத்தை அதிகரித்தது. அந்த உறைகளைப் பிரித்துப் பார்த்தபோது அவற்றில் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கஞ்சாவைப் பெற்றுச் செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்ததாகக் கூறப்படும் ஆடவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்