தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஏராளமான பீடி இலைகளையும் கடல் அட்டைகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரையில் தருவைகுளம் கடலோரப் பாதுகாப்பு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அதிகாலை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆட்டோவை அதிகாரிகள் சுற்றி வளைத்தபோது அதிலிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அதன் பின்னர் ஆட்டோவில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
உள்ளே 37 மூட்டைகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் 40 கிலோ எடை கொண்டவை.
ஏறக்குறைய 1,500 கிலோ பீடி இலைகள் அந்த மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது.
ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பதப்படுத்தப்பட்ட 160 கிலோ கடல் அட்டையையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றின் இலங்கை மதிப்பு ரூ.40 லட்சம் என்று மதிப்பிடப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக கடற்கரையில் தயார்நிலையில் அந்தப் பொருள்கள் வைக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.