சென்னை: மும்மொழிக் கொள்கையை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கின்றதென்றால், தமிழ் நாட்டில் எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து தரவுகளைத் தரும்படி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அண்ணாமலையிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது பதிவில், “பாஜக எவ்வாறு தரவுகளைக் கையாளுகிறது என்பதை உலகம் அறியும். The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற புத்தகத்தில் இதை டாக்டர் பரகலா பிரபாகர் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைத் தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டி தனது பிரசாரத்துக்கு ஏற்றவாறு எண்களைத் திரித்து விளையாடக்கூடிய கட்சி பாஜக. நீங்கள் உங்கள் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள ‘ASER’ தரவும் அப்படிப்பட்டதுதான். அதனால்தான் கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து அறிந்துகொள்ளத்தான் மாநில அரசு தனியாகக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
எழுத்தறிவில் சிரமப்படும் பாஜக ஆளும் மாநிலங்களைப் போலல்லாமல், நாங்கள் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம்.
சமமான கல்வியைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், கேந்திரிய வித்யாலயாக்கள் ஜெர்மன் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளை நீக்கிவிட்டு, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தொடர்ந்து திணித்து, மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உலகளாவிய பார்வையைத் தடுத்துள்ளது. இதன்மூலம், பாஜக தனது பிளவுபடுத்தும் சித்தாந்த நிகழ்ச்சி நிரலைத் திணித்துள்ளது.
பாஜகவின் தவறான தகவல், நிதி நெருக்கடி மற்றும் இந்தித் திணிப்பு நிகழ்ச்சி நிரலைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது,” என்று தெரிவித்துள்ளார்.