பேய், பிசாசு என்றால் எல்லாருக்குமே ஒருவித பயம், கிலி ஏற்படும். ஆனால் ஒரு பிசாசு மீது மட்டும் இந்திய மக்களின், குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதுதான் மஞ்சள் பிசாசு.
புகழ்பெற்ற பொருளியல் நிபுணர் அனிக் எழுதிய புத்தகத்தின் தலைப்புதான் மஞ்சள் பிசாசு.
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளியல் புதிர் என்பதை இந்தப் புத்தகத்தில் மிக நேர்த்தியாக, நறுக்குத் தெறித்தாற்போல் விவரித்துள்ளார் அவர்.
தங்கத்திற்காக இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதை வரலாறு பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டின் பொருளியல் சக்தியை தீர்மானிக்கும் ஆற்றல் தங்கத்துக்கு உண்டு.
அதனால்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும்கூட தங்கத்தை மஞ்சள் பிசாசு என்று ஒருமுறை குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஊடகங்களில் அடிக்கடி தென்படும் செய்திகள், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், போதைப் பொருள் தொடர்புடையதாகவே உள்ளன.
அண்மையில் கன்னட நடிகை ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் பிடிபட்டார்.
கடந்த ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் தங்கக் கடத்தலுக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் பதவி விலகினார்.
தொடர்புடைய செய்திகள்
இப்படி தங்கக் கடத்தலின் வலைப்பின்னல் எதுவரை நீள்கிறது, யாருக்கெல்லாம் அதில் தொடர்புள்ளது என்பதை யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
ஆண்களுக்கு 20, பெண்களுக்கு 40
1962 இந்தியச் சுங்கச் சட்டத்தின்கீழ் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் நாடு திரும்பும்போது எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம் என்பது தெளிவாக வளையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்கள் 20 கிராம், பெண்கள் 40 கிராம் அளவு தங்கம் கொண்டு வரலாம்.
ஏன், 15 வயதுக்குட்பட்ட சிறார்களும்கூட 40 கிராம் தங்கம் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
நகைகள், தங்கக் கட்டிகள், நாணயங்கள் என்று எந்த வகையில் வேண்டுமானாலும் தங்கம் கொண்டு வர அனுமதி உள்ளது.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் சிக்கல்தான். இந்த அளவைவிட, அதாவது ஆண்கள் 20, பெண்கள் 40 கிராமுக்கு மேல் தங்கம் கொண்டு வந்தால் 3% முதல் 10% வரை வரி விதிக்கப்படும். அதேசமயம், கூடுதலாக தங்கம் கொண்டு வருபவர்கள் அதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைத்தால், அது கடத்தல் என்று மாறிப்போகிறது.
இதன் காரணமாகவே ஆண்டுதோறும் ஏராளமானோர் தங்கக் கடத்தல் குற்றத்துக்காக கைதாகிறார்கள்.
கடத்தல் ஆசையைத் தூண்டும் குறைவான விலை
இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது எப்போதும் ஒருவித ஈர்ப்பு உண்டு.
ஏழை, பெருஞ் செல்வந்தரோ ஒருவர் குடிசை அல்லது மாளிகை என எங்கு வசித்தாலும், ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் குண்டுமணி தங்கமாவது இருக்கத்தான் செய்கிறது.
உலக நாடுகளில் அதிகமாக தங்கம் வாங்கிக் குவிப்போர் எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.
தங்கத்தின் மீதான வரி இந்தியாவில் அதிகம். அப்படியும் அதை வாங்கும் ஆர்வம் குறைந்தபாடில்லை. அதனால் தங்கத்தின் விலையும் குறைவதாக இல்லை.
இந்தியாவுக்குள் தங்கம் அதிகமாக கடத்தி வரப்பட இதுவே முக்கியக் காரணம் எனலாம்.
வளைகுடா நாடுகளில் தங்கத்துக்கு வரி விதிப்பதில்லை. எனவே இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்குச் செல்வோர் இயன்ற அளவுக்கு தங்கம் வாங்குகிறார்கள்.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ஏறக்குறைய ரூ.83,500ஆக இருந்தது எனில், அதே காலகட்டத்தில் இந்தியாவில் அதன் விலை ஏறக்குறைய ரூ.88 ஆயிரமாகும்.
கடத்தல் தங்கம் எங்கிருந்து வருகிறது?
கடந்த காலங்களில் சில குண்டர் குழுக்கள் கடல் வழியாக தங்கத்தை கடத்தி வந்தனர் எனில், இப்போது கடத்தல்காரர்கள் புதிய, நவீன முறைகளில் கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.
இந்தியாவுக்குள் நுழையும் கடத்தல் தங்கத்தின் பெரும் பங்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருவதாக பிபிசி தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதையடுத்து, மியன்மார் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தவிர சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் கடத்தல்காரர்கள் தங்கம் கொண்டு வருகிறார்கள்.
“கடத்தல் தங்கத்தில் 10%மட்டுமே பிடிபடுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2023-24இல் ஏறக்குறைய 4,869 கிலோ தங்கம் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டது,” என்றும் அந்தச் செய்தி ஊடகம் கூறியுள்ளது.
இந்தியாவில் பதிவாகும் தங்கக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் ஏறக்குறைய 60% வழக்குகள் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில்தான் பதிவாகின்றன.
வரி குறைந்ததால் கடத்தலும் குறைந்தது
இறக்குமதி வரியை 15 இல் இருந்து 6 சதவிகிதமாக குறைத்த பிறகு கடத்தல் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறைந்தது ஆறு மாதங்களாவது வெளிநாட்டில் வசித்திருந்தால், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 10 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனினும், இதில் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும்.
எனவே வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்து வருவோர் அதுகுறித்த விவரங்களை விமான நிலையத்தில் அளித்தால் போதுமானது. தங்கம் வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களும் அவசியம்.
தங்கம் கடத்தும் போது ஒருவர் பிடிபட்டால் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம், ஆயுள் தண்டனை, வெளிநாடு செல்ல வாழ்நாள் தடையும் விதிக்கப்படலாம்.