சென்னை: கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட நவீன ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து முழுமையான விசாரணைக்குத் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, ஏழு ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட ரூ.300 கோடி செலவில் ஏழு தளங்களுடன் உருவான இந்நூலகத்தை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.
அங்கு போலி பதிப்பகங்கள், போலி எழுத்தாளர்கள், தவறான தகவல்கள் என ஆயிரக்கணக்கான நூல்கள் இடம்பெற்றிருப்பது பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நூல் பரிந்துரைக் குழுவிலிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது என்று தமது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“முந்தைய ஆட்சியில் கடந்த பிப்ரவரியிலேயே இப்புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. கேள்விப்படாத பதிப்பகம் ஒன்றிலிருந்து மட்டும் 1,500க்கும் மேற்பட்ட நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. கீழடியில் கண்டெடுக்கப்படாத சிலைகளின் புகைப்படங்களை இணையத்திலிருந்து எடுத்துப் புத்தகங்களில் போட்டுள்ளனர். பாரதியார் கதைகள் என்ற பெயரில் மிக மோசமான எழுத்து நடையில் நூல்கள் உள்ளன. பெரியார் பெயரிலேயே ஊழல் செய்திருப்பது வெட்கக்கேடானது,”என்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்நிர்வாக முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும், இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் உறுதியளித்தார்.
நூலகத்தைப் பார்வையிட்ட பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன், நூல் கொள்முதலில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாகத் தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நூலகத்திற்கு நூல்களை விநியோகிப்பதற்காகவே ‘அகல் விளக்கு’ போன்ற போலிப் பதிப்பகங்கள் தொடங்கப்பட்டு 1,800 நூல்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அச்சிடப்பட்டுள்ள பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் (ISBN) யாவும் போலியானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ.350க்கு விற்கும் நிலையில், சூர்யா பாலு என்ற பெயரில் எழுதப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445க்கு வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் ஒரு நூலில் மதுரைக் காஞ்சியை எழுதியவர் மதுரைக் கூழத்திப் பெருவழுதி என தவறாக உள்ளது என்றும், இன்னொரு நூலில் கீழடியில் கிடைத்த சிற்பம் என நந்தியின் புகைப்படம் உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பல நூல்களில் குறிப்புகள் தவறாக இருப்பதாகவும், நூல்களை விநியோகித்ததில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போலி நூல்களை உடனடியாக அகற்றி, விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும், மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
