தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் ‘விலைபோகும் விளைநிலங்கள்’

4 mins read
e2b8422e-86c8-4e97-812b-92a6879e0877
‘டிஎன்ஈஆர்ஏ’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு விதிகளைக் கொண்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 4

“உங்க சாதி வழக்கப்படி செத்துப்போனவர்களை எரிப்பீர்களா? புதைப்பீர்களா?”

“மிதக்க விடுவோம்”.

இது திரைப்படம் ஒன்றில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி. இது நாளை நம் கண்முன்னே நிகழக்கூடிய நிஜக்காட்சியாய் இருக்கலாம்.

அந்த அளவுக்கு நில நுகர்வு வெறி ஆட்டிப்படைக்கிறது.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவையாகும்.

ஆனால், உணவு உற்பத்திக்கான ஊற்றுகளைத் தூர்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் சிலரின் பேராசையால் உடுக்க உடையும் இருக்க இடமும் மட்டும் இருந்தும் என்ன பயன்?

இப்படி அச்சப்பட வைக்கிறது ‘ரியல் எஸ்டேட்’ எனப்படும் நில வர்த்தகம்.

இந்தியாவிலேயே நகரமயத்திற்காக விளைநிலங்களை அழிப்பதில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் என்பவர், ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார்.

அதில், கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 27 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்தார்.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழக கிராமங்கள் ஒழிந்து நகரமயமாகி, விளை நிலங்கள் வீடுகளாக, கட்டடங்களாக உருமாறிவிட்டன.

தென்னிந்தியாவின் முக்கியமான வாசல் எனப்படுகிறது சென்னை மாநகரம். இதனால் சென்னை, தமிழகத்தில் ஏறக்குறைய 45 விழுக்காடு நகரமயமாகிவிட்டது.

‘இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் உள்ளது’ என்றார் காந்தியடிகள். அந்த ஆன்மா அழிந்து கொண்டிருக்கிறது.

விவசாயிகளின் தொடர் நஷ்டம், அரசு விவசாயத்திற்குப் போதுமான உதவிகளை ஆழ்ந்தறிந்து செய்யாதது போன்ற காரணிகளால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ஒரு கோடியே 27 லட்சம் ஏக்கர். ஆண்டுக்கு 30,000 முதல் 50,000 ஏக்கர் வரையிலான விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் விற்கப்படுகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சமதள விளைநிலங்கள் குறைவு. அதனால் விளைநிலங்களை விற்க கடுமையான சட்டம் அங்கு உள்ளது.

அப்படியென்றால், தமிழகத்தில் கடும் சட்டங்கள் இல்லையா?

“உள்ளது ஆனால், இல்லை” என்கிற நிலைதான் பெரும்பாலும் உள்ளது.

‘டிஎன்ஆர்ஈஆர்ஏ’ (TNRERA - Tamilnadu Real Estate Regulatory Authority) எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு விதிகளைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிப்பதில்லை. விவசாயத்திற்குப் பயனில்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றலாம்.

ஆனால், இந்த ஓட்டை வழியே உள்புகுந்துவிடுகிறார்கள் ரியல் எஸ்டேட் தரகர்களும் முதலாளிகளும்.

அதாவது, நில மதிப்புக்கு மேல் அதிகமான விலை கொடுத்து ஆசைகாட்டி, விவசாயிகளிடம் விளைநிலங்களை வாங்குபவர்கள், அதில் எவ்வித வேளாண் உற்பத்தியும் செய்யாமல் சில ஆண்டுகளுக்கு அப்படியே கிடப்பில் போடுவார்கள். இதனால் வாங்கியவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு விலை மதிப்பு கூடிக்கொண்டே போகும்.

சிலபல ஆண்டுகளுக்குப் பின், அந்த விளைநிலத்தில் மண்ணைத் தொட்டு, ‘விவசாயத்திற்குத் தகுதியற்ற நிலம்’ எனச் சான்று பெற்று, வீட்டு மனைகளாக்கி, கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டினரும் ஆர்வம் காட்டுவதால் சூடுபிடித்தபடியே இருக்கிறது நில விற்பனை.

2050ஆம் ஆண்டிற்குள் ‘ரியல் எஸ்டேட்’டின் இந்திய வர்த்தகம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிச் செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில், ஏறக்குறைய ஐந்தரை லட்சம் வீடுகளைக் கட்டி, 48% வீட்டு விற்பனையை அதிகரிக்கச் செய்துள்ளது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி.

சென்னையின் மேல்தட்டு கலாசார வாழ்வில் ஈர்க்கப்பட்டு, இளையர்கள் இங்கு குடியேற விரும்புவதால் தமிழக ‘ரியல் எஸ்டேட்’ வர்த்தகம் மிகுந்த வளமையுடன் இருக்கிறது. வீட்டு விலைகள் ஆண்டுக்கு 7% அதிகரித்தபடி உள்ளன.

விவசாயப் பணிகளுக்குத் தடையற்ற மின்சாரம், நீர்வளம், புதிய விதைகள், நவீன தொழில்நுட்பம், விளைச்சலுக்கு நல்ல விலை... இப்படி அரசு விவசாயிகளின் தோழனாக மாறினால் விளைநிலம் ‘விலை’ நிலம் ஆவது கட்டுப்படுத்தப்படும்.

சீனாவைப் போல், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து புல்லட் ரயிலை இயக்கினால் சென்னையில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊரில் இருந்து தினமும் வந்து செல்ல வசதியாக இருக்கும். இதனால் சென்னை, புறநகர்களில் வீடு கட்ட அழிக்கப்படும் நிலங்கள் காக்கப்படும்.

வீட்டு விலையும் வீட்டு வாடகையும் உயராது. இதை அரசு இயந்திரங்கள் விழிப்புடன் செயல்படுத்தினால் நல்லது. இல்லையெனில் நிலவர்த்தகம் எனும் பொருளியல் அடைந்து வருவது வளர்ச்சியா? வீக்கமா? என்பது தெரியாமல் போய்விடும்.

‘ரியல் எஸ்டேட்’ மூலம் மண்ணைத் தின்னும் பேராசைக்காரர்கள், தங்களின் வாரிசுகளுக்காக, சந்ததிகளுக்காகச் சேர்த்து வைக்கும் சொத்துகளால் யாருக்கு என்ன லாபம்?

உண்ண உணவு பயிரிட நிலமில்லாமல் தவிப்பார்கள். அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கதாநாயகனால் வந்த கலாட்டா!

‘சாய் சூர்யா டெவலப்பர்ஸ்’ எனும் ஆந்திர-தெலுங்கானா ‘ரியல் எஸ்டேட்’ நிறுவனத்தின் தூதுவராக இருக்கும் பிரபல தெலுங்குத் திரை நாயகன், இந்நிறுவன விளம்பரத்தில் நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.

இந்த நிறுவனம் ஒரே மனையைப் பலருக்கு விற்ற சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், ‘இந்த மனைக்கு அருகே அது இருக்கு, இரு இருக்கு’ எனச் சொல்லி விளம்பரத்தில் நடித்தார் மகேஷ் பாபு.

மனை வாங்கிய சிலர், ‘எதுவுமே இல்லாததால்’ ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, மகேஷ் பாபுவை விசாரணைக்கு அழைத்துள்ளது நீதிமன்றம்.

இந்த நிலையில், தமிழக அரசு இம்மாதம் ‘ரியல் எஸ்டேட்’ வர்த்தகத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வீட்டு மனை விளம்பரப் படங்கள் எடுப்பதற்கு கெடுபிடிகளைப் போட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்