கன்னட நடிகர் யஷ்ஷுடன் இணைந்து புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
’டாக்சிக்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை மலையாள நடிகை கீத்து மோகன்தாஸ் இயக்குகிறார். மேலும் தமிழ், மலையாளத் திரையுலகங்களைச் சேர்ந்த பல கலைஞர்கள் இப்படத்துக்காக பங்களித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் வனப்பகுதியில் பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைத்துள்ளனர். அங்குள்ள மலையின் கீழ்ப்பகுதியில் இருந்த நூற்றக்கணக்கான மரங்களை படக்குழுவினர் வெட்டி அகற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆவேசம் அடைந்த சமூக ஆர்வலர்கள் பலர், கர்நாடக மாநில அரசுக்கு பல்வேறு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதையடுத்து அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் படப்பிடிப்பு நடிக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மரங்களை வெட்ட அனுமதி அளித்தவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ‘டாக்சிக்’ படக்குழு மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.