தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹைப்பர்லூப் முறையால் 15 நிமிடங்களில் சென்னை-பெங்களூர் பயணம்

2 mins read
d35ff0d5-4ba8-4fa7-966f-cc612ddc1dd6
ஐஐடி மெட்ராசில் ஹைப்பர்லூப் முறையை நேரில் சென்றுப் பார்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். - படம்: இந்திய ரயில்வே அமைச்சு
multi-img1 of 2

சென்னையில்: தமிழகத் தலைநகர் சென்னையில் இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) மாணவர்கள் உருவாக்கியிருக்கும் ஹைப்பர்லூப் (hyperloop) தொழில்நுட்பப் பணிகளை இந்தியாவின் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மார்ச் 15) நேரில் சென்றுப் பார்வையிட்டார்.

குறைந்த காற்றழுத்த குழாயில் அதிவேகமாகப் பயணம் செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து முறைதான் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது. இது உராய்வு மற்றும் எதிர்ப்பைக் குறைக்க ‘மெக்னட்டிக் லீவியேஷன்’ (காந்த சக்தியில் மிதந்து செல்வது), உந்துவிசையைப் பயன்படுத்தி தற்போதைய போக்குவரத்து முறைகளைவிட பலமடங்கு அதிவேகமாகச் செல்லும் ஆற்றலை ஹைப்பர்லூப் கொண்டிருக்கிறது.

தற்போதைய சோதனைகளின்படி இதன் மூலம் மணிக்கு அதிகபட்சம் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், ஹைப்பர்லூப் முறையைக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூருக்கு 15 முதல் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும் என்று மாலைமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்காகச் சென்னையில் உள்ள ‘ஐஐடி மெட்ராஸ்’ ஆய்வுக் குழு, ஹைப்பர்லூப் அங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டம், மத்திய ரயில்வே அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான சோதனையை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஹைப்பர்லூப் ஒரு புதிய பரிசோதனை. இதில், ஒரு வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இந்த அங்கம் வழக்கமாக ரயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுவதைப் போல் இல்லாமல் ‘காந்த லீவியேஷன்’ மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தத் திட்டம் சோதனைக் கட்டத்தில் உள்ளது. இதை உருவாக்க ஐஐடி மெட்ராஸ் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையிலேயே பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்னையிலேயே தொடங்கிய நிலையில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னை ‘ஐஐசிஎஃப்’ல் உருவாக்கப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்