தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து மோடியிடம் வலியுறுத்தினேன்: ஸ்டாலின்

2 mins read
0d9b9edd-10d1-44c3-8bf9-82c8e7949f96
பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியைப் பெறுவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் சென்னை திரும்பிய அவர், முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாகவும் அந்த நகரங்களில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம் குறித்தும் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக திரு ஸ்டாலின் கூறினார்.

சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பது, செங்கல்பட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றுவது, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகிய கோரிக்கைகளும் தமிழக அரசு சார்பாக முன்வைக்கப்பட்டது என்றார் அவர்.

“இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், படகுகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை நித்தி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசினேன்.

“கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டேன். இதனை ஏற்று இரண்டு நிமிடங்கள் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்தக் கோரிக்கையை அளித்தேன்.

“இதனைச் செய்வேன் எனச் சொன்னார். செய்வாரா மாட்டாரா என்பது போகப்போகத் தெரியும். தமிழகத்திற்கான கல்வி நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார் மு.க.ஸ்டாலின்.

மேலும், எப்போது டெல்லி வந்தாலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா, ராகுலை தாம் சந்திப்பது வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், இம்முறை அத்தகைய சந்திப்பின்போது, அரசியல் குறித்தும் பேசப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை என்றார்.

அமலாக்கத்துறை தொடர்பான உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து நியாயமானது என்றும் நியாயமான தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதாகவும் தெரிவித்த திரு ஸ்டாலின், அமலாக்கத்துறை சோதனை அரசியல் ரீதியானது என்றார்.

டாஸ்மாக், குவாரி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை கூறுவது வெறும் பொய், பித்தலாட்டம் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், தேர்தலை மனத்தில் வைத்து தேவையில்லாமல் பொய்ப் பிரசாரம் செய்வதாகச் சாடினார்.

“சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மறுத்துள்ளனர். எதையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்.

“நான் வெள்ளைக்கொடி காட்டுவதாக அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி கூறுகிறார். அவர் போன்று என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை. அவரிடம் இருப்பது போன்று காவிக்கொடியும் இல்லை,” என்றார் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்