நீலகிரி: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி கோரியதாகவும் பல்வேறு காரணங்களைச் சொல்லி அந்தப் பணியைத் தொடங்கவிடாமல் திமுக அரசு தடை போட்டு வருவதாகவும் சசிகலா குற்றஞ்சாட்டி உள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் தோழியும் கோடநாடு எஸ்டேட் பங்குதாரருமான சசிகலா, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் என்றார்.
அதன் காரணமாகவே கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மணி மண்டபம் கட்ட பூமி பூசை நடத்தப்பட்டதாகவும் தடைகளை மீறி அந்தப் பணி நிறைவேற்றப்படும் என்றும் சசிகலா ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.
“தனியாருக்குச் சொந்தமான இடங்களில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இதுபோன்ற மணி மண்டபங்களை அமைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். ஆனால், எங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது.
“இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்,” என்றார் சசிகலா.
ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்றால் மக்கள் துணை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தாம் சென்ற இடங்களில் எல்லாம் அதுவே மக்களின் எண்ணமாக உள்ளது என்றார்.
தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது என்றும் திமுக அரசு வரி, வரி என வசூல் செய்வதில் மட்டுமே முனைப்பு காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“மக்களிடம் வசூல் செய்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நிலை மாற ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதைக் கொண்டு வருவேன்,” என்று சூளுரைத்தார் சசிகலா.