விழுப்புரம்: புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு சகோதரனாக, நண்பனாக, உறவாக, நட்பாக, மக்களில் ஒருவனாக உழைப்பேன் என்று உறுதிகூறியுள்ளார்.
பத்தோடு பதினொன்றாக இருக்கப்போவதில்லை என்றும் சொற்கள் அல்ல, செயல்களே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சொன்னதைச் செய்துமுடிக்கும் வரை நெருப்பாக இருக்கவேண்டியது அவசியம் என்றார் அவர்.
மக்கள் யாவரும் பிறப்பால் சமமே என்பதால் பாகுபாடற்ற சமநிலைச் சமூகம் படைப்பதும் ஊழல் மலிந்த கலாசாரத்தை எதிர்ப்பதும் தம் கட்சியின் கோட்பாடுகளில் அடங்கும் என்று விஜய் சொன்னார்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் எழுச்சியுடன் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) மாலை தவெக மாநில மாநாடு நடைபெற்றது.
முன்னதாக, மாநாட்டு மேடையை அடைந்ததும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர்த் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார் விஜய். பின்னர் 100 அடி உயரக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கட்சிக்கொடியை தொலைவியக்கி மூலம் அவர் ஏற்றிவைத்தார்.
மாநாட்டில் ‘வெற்றி வெற்றி வெற்றி வாகை’ எனும் கழகத்தின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பாடலில் சமயச் சார்பற்ற சமூகநீதிக் கொள்கையோடு அரசியல் செய்ய வருகிறேன் என்று கூறும் விஜய்யின் பேச்சும் இடம்பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கட்சியின் கொள்கைகளில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, தமிழையும் ஆங்கிலத்தையும் வலியுறுத்தும் இருமொழிக் கொள்கை, ஊழலற்ற நிர்வாகம், சமய, இன, பேதமற்ற கல்வி, போதையில்லாத் தமிழகம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நிர்வாகச் சீர்திருத்தம், மதுரையில் தலைமைச் செயலகக் கிளை, சாதிவாரிக் கணக்கெடுப்பு, அகழ்வாராய்ச்சிக்கு ஆதரவு, ஆளுநர் பதவியை நீக்க வலியுறுத்தல், பதநீரை மாநில பானமாக அறிவித்தல், அரசு ஊழியர்கள் வாரம் இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவிடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்தும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறது தவெக. இதன் முதல்படியாகக் கருதப்படுகிறது இந்த மாநாடு.
கோட்டை மதில் சுவர்போல் வடிவமைக்கப்பட்டு, அதன்மீது தமிழ்நாடு சட்டமன்றம் இருக்கும்படியாக மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டிருந்தது. வருகையாளர்களுக்கென 55,000 இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
கட்சித் தொண்டர்களுக்கு எழுச்சியூட்டும்படி ஆற்றிய உரையில், தனித்துச் செயல்பட்டு வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்தபோதும் கூட்டணி அமைக்க முன்வருவோரையும் அரவணைக்கத் தயார் என்று விஜய் தெரிவித்துள்ளார்.